×

அடுத்த 2 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்...:அசாருதீன் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள அசாருதீன் இது குறித்து நேற்று கூறியதாவது:  கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நெருக்கடியான கட்டத்தில் வேறு வழி இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். ஐபிஎல் தொடர் அனைவருக்குமே முக்கியமானது. இந்த தொடரில் விளையாடுவதன் மூலமாக நல்ல வருமானம் கிடைப்பதால் தான் வெளிநாட்டு வீரர்களும் விளையாட விரும்புகிறார்கள்.

உள்ளூரில் உள்ள இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் ஐபிஎல் விளங்குகிறது. 2020 சீசன் நிச்சயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. அதற்கேற்ப அட்டவணையை தயாரிக்க வேண்டும். அதே சமயம் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரையும் நடத்த வேண்டும். அந்த தொடரும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அக்டோபர் மாதத்துக்குள்ளாக நிலைமை சீராகிவிடும் என நம்புவோம். வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்த நாட்கள் வீரர்களுக்கு விரக்தியை கொடுக்கும் என்பது உண்மை தான். வலைப் பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், எல்லா வீரர்களுமே உடல்தகுதியை பராமரிப்பதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இயல்பு நிலை திரும்பியதும், ஒரு வாரத்தில் விளையாடுவதற்கு தயாராகி விடலாம். இவ்வாறு அசாருதீன் கூறியுள்ளார்.

Tags : Corona Virus, Azharuddin, Cricket Series
× RELATED பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு...